ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அருளியது ... !!!
மஹாபாரதப் போர் முடிந்தது. துரியோதனனும் மாண்டு போனான். பாண்டவர்கள் வென்றார்கள். துரோணாச்சாரியாருடைய மகனான அச்வத்தாமா, துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, துரியோதனனுடைய திருப்திக்காக, பாண்டவர்களுடைய பிள்ளைகளை எல்லாம் கொன்று விடவேண்டும் என்று தவறான உறுதி பூண்டான்.
அதற்காக, இரவு நேரத்தில் கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் புத்திரர்களைக் கொன்று விட்டு ஓடி விட்டான். மேலும், அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் வளரும் சிசுவையும் கொன்று விட ஓர் அஸ்திரத்தை ஏவினான். இது கண்டு திரௌபதி சோகத்தால் துடித்தாள். ‘உன் பிள்ளைகளைக் கொன்ற அச்வத்தாமாவை நான் விட மாட்டேன். இதோ அவனைப் பிடித்துக் கொன்று வருகிறேன்’ என்று அர்ஜுனன், அவளிடத்தில் சூளுரைத்தான். அர்ஜுனன், அச்வத்தாமாவைத் துரத்த, அவன் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடினான்.
ஆனால், அவனால் தப்பிக்க முடியவில்லை. இனி, அர்ஜுனனை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்று நினைத்து, பிரம்மாஸ்திரத்தை எய்தான் அச்வத்தாமா. ஒரு அஸ்திரத்தை எய்யும்போது, அதைத் திரும்ப எடுக்கக் கூடிய வல்லமை ஒருவனுக்கு இருக்க வேண்டும்.
ஆனால், அச்வத்தாமாவுக்கு அந்த வல்லமை கிடையாது. ஆத்திரத்தில் அஸ்திரத்தை எய்து விட்டான். அது அவனையும் துன்புறுத்தத் தொடங்கிற்று. அர்ஜுனன் தன்னுடனேயே இருந்த கண்ணனிடம், ‘நான் இந்த அஸ்திரத்துக்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கேட்டான்.
அப்போது கண்ணனோ, ‘வேறு வழியில்லை. பிரம்மாஸ்திரத்துக்கு பதில், அதே பிரம்மாஸ்திரத்தை அச்வத்தாமாவை நோக்கி எய்வாய்’ என்று ஆணையிட்டார். அர்ஜுனனும் எய்தான். இரண்டு அஸ்திரங்களும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு, உலகத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
அப்போது முனிவர்களுடைய வேண்டுகோளால், கண்ணனுடைய ஆணையால், அர்ஜுனன் இரண்டு அஸ்திரங்களையும் நாசம் செய்தான். இதனால் அச்வத்தாமாவினுடைய ஆன்ம பலம் மங்கிற்று; அவனுக்கு சக்தி இல்லாமல் போயிற்று. உடனே அர்ஜுனன், அச்வத்தாமாவைக் கட்டி, தன்னுடைய படை வீட்டுக்குக் கைதியாக பிடித்துக் கொண்டு போகப் பார்த்தான்.
ஆனால், கண்ணனோ அர்ஜுனனை பரீட்சை செய்ய எண்ணி, ‘அர்ஜுனா! உங்கள் குலத்தையே அழித்தவன் இவன். துரியோதனனுக்குத் துணை போனவன். இப்படிப்பட்டவனுக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும். இவனைக் கொன்று விடு!’ என்று கூறினான்.
ஆனால், உடனடியாக அர்ஜுனன் அவனைக் கொல்லாமல், நேரே திரௌபதியிடம் அவனை அழைத்துச் சென்றான். ‘திரௌபதி! உன் மக்களைக் கொன்றவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீயே கூறு’ என்றான் அர்ஜுனன்.
ஆனால், மாதர்குல அரசியல்லவோ திரௌபதி! நம் பாரதப் பெண்டிற்கே மன்னிக்கும் குணம் அதிகம். ஆகையால், ‘குருவான துரோணாச்சாரியாருடைய புதல்வன் இவன். மேலும் சிறந்த வீரன். அப்படி இருப்பவனைக் கொல்லலாகாது. மேலும் ஒரு குருவினுடைய புதல்வனும் கூட குருவுக்கு ஸமானம் ஆகிறான். தவிரவும், நான் அடைந்த புத்திர சோகத்தை இவனது தாய் அடைய வேண்டாம். ஆகையால், இவனை விடுதலை செய்து விடுவோம்’ என்றாள் திரௌபதி. அனைவரும் சம்மதித்தார்கள்.
ஆனால், பீமசேனன் மட்டும், ‘இவனைக் கொன்றே தீர வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான். கண்ணனோ, இரண்டு பேருக்கும் நடுநிலையாக தீர்ப்புச் சொல்வதுபோல, ‘அர்ஜுனா! நீ க்ஷத்ரியன். ஏற்கெனவே திரௌபதியிடம், ‘அச்வத்தாமாவைக் கொன்று வருகிறேன்’ என்று சூளுரைத்து விட்டுச் சென்றாய்.
அதன்படி நடக்க வேண்டும்; ஆனால், மற்றொருபுறம் பார்த்தால், திரௌபதி கூறுவதும் நியாயமாகத்தான் உள்ளது. குருவின் புத்திரனைக் கொல்வது என்பது கூடாதுதான்! ஆகவே, இந்த இரண்டுக்கும் ஊறு நேராதவாறு ஒரு முடிவு எடுத்துச் செயல்படு’ என்று புன்னகையோடு கூறினார்.
அர்ஜுனனும், கண்ணனுடைய உட்கருத்தை அறிந்து கொண்டு, அச்வத்தாமாவை மொட்டை அடித்து, அவனுடைய நெற்றியில் எப்போதும் பதிந்திருந்து ஒளிரும் ஓர் உயர்ந்த இரத்தினத்தைத் தன் கத்தியால் குத்தி பிளந்து எடுத்தான். எதற்காகத் தெரியுமா? ஒரு மனிதனை மொட்டை அடித்து விட்டாலோ, அவன் பணத்தை அபகரித்து விட்டாலோ, அல்லது அவனுடைய இடத்தை விட்டு துரத்தி விட்டாலோ, அவனைக் கொன்றதற்குச் சமம்.
இப்போது அர்ஜுனன், அவன் தலையை மொட்டை அடித்து, மணியை எடுத்துவிட்ட படியால், அவனைக் கொன்றதற்குச் சமமாகி விட்டது; அதே நேரத்தில், அவனை உடலோடு விட்டு, குருவினுடைய புதல்வனிடத்தில் அபசாரப்படாதபடியும் ஆகிவிட்டது. இதைத்தான் கண்ணனும் எதிர்பார்த்தார். ஆக, கண்ணன் தண்டிக்கச் சொன்னாலும், திரௌபதி தண்டிக்கவில்லை. மன்னித்தாள், மறந்தாள்!