Sep 27, 2014

இருளாக்கிய வெண்மை..!


சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.


--- Arul Samuel Puliangudi

Jul 23, 2014

அச்வத்தாமாவுக்கு என்ன தண்டனை?

ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அருளியது ... !!!
மஹாபாரதப் போர் முடிந்தது. துரியோதனனும் மாண்டு போனான். பாண்டவர்கள் வென்றார்கள். துரோணாச்சாரியாருடைய மகனான அச்வத்தாமா, துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, துரியோதனனுடைய திருப்திக்காக, பாண்டவர்களுடைய பிள்ளைகளை எல்லாம் கொன்று விடவேண்டும் என்று தவறான உறுதி பூண்டான்.
அதற்காக, இரவு நேரத்தில் கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் புத்திரர்களைக் கொன்று விட்டு ஓடி விட்டான். மேலும், அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் வளரும் சிசுவையும் கொன்று விட ஓர் அஸ்திரத்தை ஏவினான். இது கண்டு திரௌபதி சோகத்தால் துடித்தாள். ‘உன் பிள்ளைகளைக் கொன்ற அச்வத்தாமாவை நான் விட மாட்டேன். இதோ அவனைப் பிடித்துக் கொன்று வருகிறேன்’ என்று அர்ஜுனன், அவளிடத்தில் சூளுரைத்தான். அர்ஜுனன், அச்வத்தாமாவைத் துரத்த, அவன் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடினான்.
ஆனால், அவனால் தப்பிக்க முடியவில்லை. இனி, அர்ஜுனனை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்று நினைத்து, பிரம்மாஸ்திரத்தை எய்தான் அச்வத்தாமா. ஒரு அஸ்திரத்தை எய்யும்போது, அதைத் திரும்ப எடுக்கக் கூடிய வல்லமை ஒருவனுக்கு இருக்க வேண்டும்.
ஆனால், அச்வத்தாமாவுக்கு அந்த வல்லமை கிடையாது. ஆத்திரத்தில் அஸ்திரத்தை எய்து விட்டான். அது அவனையும் துன்புறுத்தத் தொடங்கிற்று. அர்ஜுனன் தன்னுடனேயே இருந்த கண்ணனிடம், ‘நான் இந்த அஸ்திரத்துக்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கேட்டான்.
அப்போது கண்ணனோ, ‘வேறு வழியில்லை. பிரம்மாஸ்திரத்துக்கு பதில், அதே பிரம்மாஸ்திரத்தை அச்வத்தாமாவை நோக்கி எய்வாய்’ என்று ஆணையிட்டார். அர்ஜுனனும் எய்தான். இரண்டு அஸ்திரங்களும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு, உலகத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
அப்போது முனிவர்களுடைய வேண்டுகோளால், கண்ணனுடைய ஆணையால், அர்ஜுனன் இரண்டு அஸ்திரங்களையும் நாசம் செய்தான். இதனால் அச்வத்தாமாவினுடைய ஆன்ம பலம் மங்கிற்று; அவனுக்கு சக்தி இல்லாமல் போயிற்று. உடனே அர்ஜுனன், அச்வத்தாமாவைக் கட்டி, தன்னுடைய படை வீட்டுக்குக் கைதியாக பிடித்துக் கொண்டு போகப் பார்த்தான்.
ஆனால், கண்ணனோ அர்ஜுனனை பரீட்சை செய்ய எண்ணி, ‘அர்ஜுனா! உங்கள் குலத்தையே அழித்தவன் இவன். துரியோதனனுக்குத் துணை போனவன். இப்படிப்பட்டவனுக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும். இவனைக் கொன்று விடு!’ என்று கூறினான்.
ஆனால், உடனடியாக அர்ஜுனன் அவனைக் கொல்லாமல், நேரே திரௌபதியிடம் அவனை அழைத்துச் சென்றான். ‘திரௌபதி! உன் மக்களைக் கொன்றவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீயே கூறு’ என்றான் அர்ஜுனன்.
ஆனால், மாதர்குல அரசியல்லவோ திரௌபதி! நம் பாரதப் பெண்டிற்கே மன்னிக்கும் குணம் அதிகம். ஆகையால், ‘குருவான துரோணாச்சாரியாருடைய புதல்வன் இவன். மேலும் சிறந்த வீரன். அப்படி இருப்பவனைக் கொல்லலாகாது. மேலும் ஒரு குருவினுடைய புதல்வனும் கூட குருவுக்கு ஸமானம் ஆகிறான். தவிரவும், நான் அடைந்த புத்திர சோகத்தை இவனது தாய் அடைய வேண்டாம். ஆகையால், இவனை விடுதலை செய்து விடுவோம்’ என்றாள் திரௌபதி. அனைவரும் சம்மதித்தார்கள்.
ஆனால், பீமசேனன் மட்டும், ‘இவனைக் கொன்றே தீர வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான். கண்ணனோ, இரண்டு பேருக்கும் நடுநிலையாக தீர்ப்புச் சொல்வதுபோல, ‘அர்ஜுனா! நீ க்ஷத்ரியன். ஏற்கெனவே திரௌபதியிடம், ‘அச்வத்தாமாவைக் கொன்று வருகிறேன்’ என்று சூளுரைத்து விட்டுச் சென்றாய்.
அதன்படி நடக்க வேண்டும்; ஆனால், மற்றொருபுறம் பார்த்தால், திரௌபதி கூறுவதும் நியாயமாகத்தான் உள்ளது. குருவின் புத்திரனைக் கொல்வது என்பது கூடாதுதான்! ஆகவே, இந்த இரண்டுக்கும் ஊறு நேராதவாறு ஒரு முடிவு எடுத்துச் செயல்படு’ என்று புன்னகையோடு கூறினார்.
அர்ஜுனனும், கண்ணனுடைய உட்கருத்தை அறிந்து கொண்டு, அச்வத்தாமாவை மொட்டை அடித்து, அவனுடைய நெற்றியில் எப்போதும் பதிந்திருந்து ஒளிரும் ஓர் உயர்ந்த இரத்தினத்தைத் தன் கத்தியால் குத்தி பிளந்து எடுத்தான். எதற்காகத் தெரியுமா? ஒரு மனிதனை மொட்டை அடித்து விட்டாலோ, அவன் பணத்தை அபகரித்து விட்டாலோ, அல்லது அவனுடைய இடத்தை விட்டு துரத்தி விட்டாலோ, அவனைக் கொன்றதற்குச் சமம்.
இப்போது அர்ஜுனன், அவன் தலையை மொட்டை அடித்து, மணியை எடுத்துவிட்ட படியால், அவனைக் கொன்றதற்குச் சமமாகி விட்டது; அதே நேரத்தில், அவனை உடலோடு விட்டு, குருவினுடைய புதல்வனிடத்தில் அபசாரப்படாதபடியும் ஆகிவிட்டது. இதைத்தான் கண்ணனும் எதிர்பார்த்தார். ஆக, கண்ணன் தண்டிக்கச் சொன்னாலும், திரௌபதி தண்டிக்கவில்லை. மன்னித்தாள், மறந்தாள்!


Jun 25, 2014

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்



கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.


அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.


May 8, 2014

ராமனை "பரமாத்மா' என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே


ராவணன் இறந்ததும், அவனது மனைவி மண்டோதரி பதட்டமாக வந்தாள். 

வாழ்வில் நன்மை செய்தவன் நற்கதி அடைகிறான். தீமை செய்தவன் கீழ்நிலை பெறுகிறான். 

விபீஷணன் ராமனோடு சேர்ந்து நற்கதி பெற்றான். நீங்கள் தீமை செய்து மாண்டு விட்டீர்களே!''என்று கதறினாள்.
அவளுக்கு எதிரில் மரவுரியும், ஜடையும் தரித்த ராமன் வில்லேந்தி நின்றார். 

அவரைப் பார்த்ததும் "பரமாத்மா'' என்றாள். 

மனிதனாக வாழ்ந்த ராமனை ராமாயணத்தில் "பரமாத்மா" என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே. 

அவள் பதிவிரதை (கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாதவள்) என்பதால், அவளுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரிந்தது. 

தன்னுடைய பரதத்துவத்தை(கடவுள் நிலையை) ராமனால் மண்டோதரியிடம் மறைக்க முடியவில்லை. 

ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் மண்டோதரி மட்டுமே, ராமனை "பரமாத்மா" என்று சொல்கிறாள்.

Apr 8, 2014

அணையா நெருப்பு

படித்ததில் பிடித்தது 

கதையாசிரியர்: கமல்ஹாசன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.
‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’
‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’
‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’
‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’
‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’
‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’
‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?’’
‘‘அம்மாடியோவ்!’’
‘‘ஏன்?’’
‘‘Why not?’’
‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’
‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.
‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’
‘‘அப்பிடின்னா?’’
‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.
‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’
‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’
‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’
‘‘No, a warm tale’’ என்றேன்.துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.
விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!
ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…’’
‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…
‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.
சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.
அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.
காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.
என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.
அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.
‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.
‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.
என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!
அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.
என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.
சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.
அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’
தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.